நாட்டு மீன்

ARG FISH.pdf


நாட்டுக் மீன்களின் வகைகள்:

விரால், கட்லா, மிர்கால், வெள்ளி கெண்டை, புல் கெண்டை, சாதா கெண்டை, ரோகு



பண்ணை அமைப்பு முறை:

குளத்தின் கரைகளை நீர்க்கசிவு இல்லாத அளவுக்கு பலமாக அமைக்க வேண்டும். வண்டல் மற்றும் மணல் ஆகியவற்றோடு, களி மண்ணையும் கலந்து கரை அமைக்கலாம். கரையின் மேல்புறம் ஒரு மீட்டர் அகலம் அளவுக்கு சமதளமாகவும், இரு புறங்களும் சரிவாகவும் இருக்க வேண்டும். நீர்மட்டத்துக்கு மேல் கால் மீட்டர் அளவுக்கு கரையின் உயரம் இருக்க வேண்டும். கரையின் வெளிப்புறத்தில், தென்னை, பப்பாளி... போன்ற அதிகம் வேர் விடாத மரங்களை நிழலுக்காக நடவு செய்யலாம்.

பச்சை நிறமே... பச்சை நிறமே!

அடுத்து, குளத்தில் தாவர மிதவைகள் வளர்வதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும். குளத்தில் ஒரு அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பி, நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை சாணத்தைப் போட வேண்டும். பச்சை சாணத்தை உடனடியாகப் போடாமல்... ஒரு நாள் வைத்திருந்துதான் போட வேண்டும். மழைநீரை நம்பி வெட்டப்படும் குளமாக இருந்தால்... தண்ணீர் நிரப்புவதற்கு முன்பே சாணத்தைப் போட்டு விடலாம். ஐந்து அல்லது ஆறு நாட்களில் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் மட்டத்தை நான்கடி அளவுக்கு உயர்த்தி, மீண்டும் நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை அளவுக்கு சாணம் போட வேண்டும். அடுத்த பத்து நாட்களில் தாவர மிதவைகள் உருவாகி விடும். தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதை வைத்து, இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மிதவைகள் உருவாகாவிட்டால், வேறு நீர் நிலைகளில் உள்ள பாசிகளை, எடுத்து வந்து போடலாம்

தாவர மிதவைகள்... கவனம்!

தாவர மிதவைகள், குளத்தில் சரியான அளவுக்கு இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால், பிராண வாயுவின் அளவு குறைந்து மீன்கள் இறந்து விடும் வாய்ப்பும் உள்ளது. குறைவாக இருந்தால், இயற்கை உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மீன்களின் வளர்ச்சி குறைந்துவிடும். 'தாவர மிதவைகள் சரியான அளவுக்கு உருவாகியிருகின்றனவா?’ என்று பார்ப்பதற்கும் ஒரு வழி இருக்கிறது.
காலை பத்து மணி அளவில் குளத்தில் இறங்கி நின்று கொண்டு, முழங்கை வரை மடித்து, உள்ளங்கையை மேற்புறமாக திருப்பி வைத்துக் கொண்டு... கையைக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் இறக்க வேண்டும். உள்ளங்கை கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறையத் தொடங்கும். முழங்கைக்கும், தோள்பட்டைக்கும் இடைப்பட்ட புஜப்பகுதி பகுதி மூழ்கும்போது உள்ளங்கை முழுவதுமாக மறைந்தால்... தாவர மிதவைகள் சரியான அளவில் உள்ளன என்று அர்த்தம். தோள்பட்டை பகுதி வரை மூழ்கிய பிறகும், உள்ளங்கை பார்வையில் இருந்து மறையவில்லை என்றால், மிதவைகள் குறைவாக உள்ளன என்று அர்த்தம். முழங்கை மூழ்குவதற்கு முன்பே உள்ளங்கை பார்வையிலிருந்து மறைந்தால், மிதவைகள் அதிகமாக உள்ளன என்று அர்த்தம். இதை வைத்து சரியான அளவைப் பராமரிக்க முடியும்.
மிதவைகளின் அளவு குறைந்திருந்தால்... கொஞ்சம் சாணத்தைக் கொட்டுவதன் மூலம் அதன் அளவை சமப்படுத்திவிடலாம். மிதவைகளின் அளவு அதிகமாக இருந்தால், குளத்தின் நீரை கொஞ்சம் வெளியேற்றி, புது நீரை விட வேண்டும்.



பகுதிக்கேற்ற மீன் ரகங்கள்

சரியான அளவில் தாவர மிதவைகள் உற்பத்தியான பிறகுதான் மீன் குஞ்சுகளை குளத்தில் விட வேண்டும். ஒரு ஏக்கர் குளத்தில், அதிகபட்சமாக 4 ஆயிரம் மீன்குஞ்சுகள் வரை விட்டு வளர்க்கலாம். மீன்குஞ்சுகளை விடும் முன்பாக, நமது பகுதியில் விற்பனை வாய்ப்பு, குளத்தின் அளவு, தண்ணீர் வசதி போன்றவற்றை வைத்து, வளர்க்க இருக்கும் ரகங்களை முடிவு செய்ய வேண்டும்.
பொதுவாக நமது பகுதியில், கெண்டை வகைகள், விரால், கெளுத்தி என்ற தேளி ஆகிய ரகங்கள்தான் வணிகரீதியாக லாபகரமாக இருக்கின்றன. பத்து மாதங்கள் வரை தொடர்ந்து குளத்தில் நீர் நிறுத்தும் வசதி இருந்தால், கெண்டை மீன்களையும்; ஆறு மாதங்கள் வரை நீர் நிறுத்தும் வசதி இருந்தால் கெளுத்தி மீன்களையும்; நான்கு மாதங்கள் வரை மட்டுமே நீர் நிறுத்தும் வசதி இருக்கும்பட்சத்தில், ஜிலேபி கெண்டை மீன்களையும் வளர்க்கலாம்



குஞ்சுகளுக்கு 50 நாள் வயது

 குஞ்சுகளை முடிவு செய்த உடன், 35 முதல் 50 நாட்கள் வயதுள்ள தரமானக் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட வேண்டும். இந்த வயதில் குஞ்சுகள் விரல் அளவுக்கு வளர்ந்திருக்கும். ஒரு குஞ்சு 1 ரூபாய் 50 காசு முதல் 3 ரூபாய் 50 காசு வரை ரகத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. குளத்தின் அளவுக்கேற்ற எண்ணிக்கையில்தான் குஞ்சுகளை வளர்க்க வேண்டும்.

கெண்டை ரகங்களுக்கு ஒரு மீனுக்கு ஒரு சதுர அடி இடம் தேவை. ஒரு சதுர அடியில் 3 முதல் 4 கெளுத்தி மீன்களை வளர்க்கலாம். 25% கட்லா, 15% ரோகு, 20% மிர்கால்,
10% வெள்ளிக்கெண்டை, 10% புல் கெண்டை, சாதா கெண்டை 20% என்ற கணக்கில் கெண்டை மீன் ரகங்களைக் கலந்து வளர்க்கலாம்



தீவனம்

 மீன்களுக்கு குருணை வடிவிலான சரிவிகித உணவு, ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் கடைகளில் கிடைக்கிறது. தவிடு, பிண்ணாக்கைத் தீவனமாகக் கொடுப்பதைவிட இது செலவு குறைவாக இருக்கும். ஒரு மீனுக்கு அதன் உடல் எடையின் அளவில் 2 முதல் 5 சதவிகித அளவுக்கு தினமும் உணவு கொடுத்தால் போதும். மாதத்துக்கு ஒரு முறை கொஞ்சம் மீன்களை பிடித்து, அவற்றின் எடையைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல், இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் கொடுக்க வேண்டும்.

இடத்தையும் நேரத்தையும் மாற்றாமல் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தினமும் தீவனத்தை இட வேண்டும். மீனின் மொத்த எடை எவ்வளவோ... கிட்டத்தட்ட அந்த அளவு தீவனத்தைத்தான் அது சாப்பிட்டிருக்கும் என்பது ஒரு கணக்கு. இதை வைத்து செலவுக் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு கிலோ எடையுள்ள மீன், அதன் வாழ்நாளில் ஒரு கிலோ முதல் ஒன்றே கால் கிலோ அளவுக்கு தீவனம் சாப்பிட்டிருக்கும். தேளி மீன்கள் ஆறு மாதத்தில் விற்பனைக்கேற்ற வளர்ச்சியை எட்டி விடும். கெண்டை மீன்கள் எட்டு மாதங்களில் வளர்ச்சியை அடைந்து விடும்.

குருணைத் தீவனம்

ஒரு கிலோ தீவனம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: சோயாபீன்ஸ் மாவு-210 கிராம், கருவாட்டுத்தூள்-203 கிராம், இறால் கருவாட்டுத்தூள்-200 கிராம், சோளமாவு-173 கிராம், கோதுமை மாவு-200 கிராம், உப்பு-4 கிராம், வைட்டமின் பொடி-7 கிராம். இவை மொத்தம் 997 கிராம் எடை வரும். இவற்றை தண்ணீர் சேர்த்து தயாரிக்கும்போது ஒரு கிலோ எடைக்கு வந்து விடும்.
இந்தப் பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு... கலந்து வைத்துக் கொண்டு அதில், கொதிக்க வைத்து ஆறிய நீரை ஊற்றி 5 நிமிடம் கிளறி, குக்கரில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு, வெந்தக் கலவையை உருண்டைகளாக்கி இடியாப்பம் பிழியும் குழாயில் இட்டு பிழிந்து காய வைத்தால், தீவனம் தயாராகி விடும். அதை கோணியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்



நோய்த் தடுப்பு

 கெண்டை மீன்களைப் பெரும்பாலும் நோய்கள் தாக்குவதில்லை. நீர் மேலாண்மை, தீவன மேலாண்மையைச் சரியாகப் பராமரித்தாலே போதும். விராலுக்கு மட்டும் குளிர் காலத்தில் பூஞ்சண நோய் வரும். இந்நோய் தாக்கிய மீனின் உடம்பில் சாம்பல் பூசியதைப் போல வெண்மையான படலம் படிந்திருக்கும். நாளாக, நாளாக அது புண்ணாகி விடும். பிறகு பாதிக்கப்பட்ட மீன் கீழே இருக்க முடியாமல் நீர்மட்டத்துக்கு மேலே வந்து விடும். சோர்வாக இருக்கும், அப்படி பாதிக்கப்பட்ட மீன்களைப் பிடித்து தனியாக கொண்டு போய் புதைத்தோ அல்லது எரித்தோ விட வேண்டும்.
மஞ்சள், வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, அரைத்துப் பொடித்து அவ்வப்போது குளத்தில் தூவி விட்டால்... இந்நோய் எட்டியே பார்க்காது. அதையும் தாண்டி வந்து விட்டால், ஒரு லிட்டர் ஃபார்மாலின் திரவத்தை 40 லிட்டர் நீரில் கலந்து குளத்தில் தெளித்தால், சரியாகி விடும்.

 


சந்தை வாய்ப்பு:

விற்பனைக்காக நாங்க எங்கயும் அலையறதில்ல. ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் பண்ணையிலயே நேரடி விற்பனை மூலமா எல்லாம் முடிஞ்சுடுது. அக்கம்பக்கத்துல இருக்குறவங்க தேடி வந்து வாங்கிக்குறாங்க. தேவையான அளவுக்கு அப்பப்போ பிடிச்சுக்குறோம்
மீன்கள், முக்கால் கிலோ அளவு எடைக்கு வந்தவுடன் விற்பனையைத் தொடங்கலாம்.
I BUILT MY SITE FOR FREE USING