கொண்டைக் கோழி, கழுகுக் கோழி, சண்டைக் கோழி, குருவுக் கோழி, கருங்கால் கோழி
நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை, காற்று, அதிக வெயில் போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம். இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறிய ஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழியை தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே வலை அடித்து விடுவதன் மூலம் பாம்புகளை நாம் தடுக்க முடியும். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும். இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. மழை, வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை போன்ற கொட்டகை போதுமானது
நன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும். ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் இருக்கும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்
முதலில் முதிராத ஓட்டுடன் சிறிய அளவில் முட்டையிடும். அந்த முட்டை தோல் முட்டை எனப்படும். அதைத் தொடர்ந்து சரியான அளவில் தொடர்ந்து முட்டையிடும். கோழிகள் முட்டையிடும்போது ஒரு வித சத்தத்தை எழுப்பும். அதை கேவுதல் என கூறுவர். கோழிகளிடம் இருந்து முட்டைகளைப் பிரித்து குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். துளையிடப்பட்ட மண் பானை அல்லது மரப்பெட்டியில் உமி அல்லது மரத்தூள் பரப்பி அதன்மேல் முட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கலாம். ஒரு கோழி சராசரியாக 10 முதல் 20 நாள்களில் முட்டையிடும். பின்னர் அதை அடைகாத்து குஞ்சு பொரிக்கும். ஒரு ஆண்டுக்கு 60 முதல் 120 முட்டைகள் வரை இடும்
நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓர் நல்ல கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும். அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடைகாக்கும். அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும். கோழி குஞ்சு பொரிக்கும் காலம் 21 நாள்கள் ஆகும். அடையில் உள்ள தாய் கோழி 2 அல்லது 3 நாள்கள் வரையில் அடையில் அமர்ந்திருக்கும். பின்னர் எழுந்து சென்று எச்சம் இட்டு, உணவு, தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் வந்து அமரும். எனவே அந்தக் கூடை அருகிலேயே உணவு, தண்ணீரை வைத்திருக்க வேண்டும். தினமும் தாய்க் கோழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்க் கோழியுடன் நன்கு பழகியவர்கள் தாய்க் கோழியை அகற்றிவிட்டு முட்டையை ஆய்வு செய்யலாம். அடைகாக்கத் தொடங்கிய 21 நாள்களில் குஞ்சு பொரிக்கும். நாட்டுக் கோழிகள் தங்களது குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பத்தை இறகுகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளும். ஆரம்ப காலத்தில் பருந்து, காகம், கழுகு ஆகியவை குஞ்சுகளை கொத்திச் செல்லப் பார்க்கும். எனவே தாய்க் கோழி குஞ்சுகளுடன் இருப்பது அவசியம். கோழிகளையும், குஞ்சுகளையும் இரவு நேரத்தில் அடைத்து வைப்பது சிறந்தது.
கோழிகளுக்கு உணவாக பச்சை கீரை வகைகள், அசோலா, கினியா புல், கோ-4, குதிரை மசால், காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் கொடுக்கலாம். பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால், காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். ஆரம்ப காலத்தில் உடைந்த அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச் சோளம் ஆகியவற்றை தீவனமாகக் கொடுக்கலாம். அதைத் தொடர்ந்து நாட்டுக் கோழிகள் தனக்கும், தனது குஞ்சுகளுக்கும் தாங்களே தீவனங்களைத் தேடிக் கொள்ளும். உதாரணமாக புழு, சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றை உண்டு தங்களது பசியைப் போக்கிக் கொள்ளும்.
தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும். ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும். எனவே ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம் நாட்டுக் கோழிகளில் பொதுவாக நோய்த் தடுப்பு முறையைக் கையாளத் தேவையில்லை. இருப்பினும் ராணிகேட் தடுப்பூசியை 8 வார வயதில் போடுவது நல்லது. ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களில் இந்தத் தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகிறது. தடுப்பூசிக்கு முன்னதாக மாதம் ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்வது நல்லது.
குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம். இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்